×

கர்நாடக விவசாயிகள் வருகை இல்லாததால் புஞ்சை புளியம்பட்டி சந்தையில் 400 மூட்டை விதை வெங்காயம் தேக்கம்

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு  கர்நாடகா மாநில வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வராததால் சின்ன வெங்காய விதை விலை வீழ்ச்சி அடைந்ததோடு விற்பனை ஆகாமல் தேக்கமடைந்தது. ஈரோடு மாவட்டம்  புஞ்சைபுளியம்பட்டியில்  வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இந்தசந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 800 மூட்டைகள் விதை வெங்காயம் விற்பனைக்கு வந்தது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நேற்று சந்தைக்கு வரவில்லை.  கடந்த இரண்டு வாரங்களாக கிலோ ரூ.70க்கு விற்ற விதை வெங்காயம் நேற்று விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனையானது. நேற்று சந்தைக்கு கர்நாடக மாநில வியாபாரிகள், விவசாயிகள் வராததால் 400 விதை வெங்காய மூட்டைகள் மட்டுமே விற்பனையானது. இதன் காரணமாக 400  மூட்டைகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Punchai Puliyampatti market ,Karnataka , 400 bundles of seed onions stagnated at Punchai Puliyampatti market due to non-attendance of Karnataka farmers
× RELATED கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள்...